Last Updated:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்ததாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, “உயிருடன் உள்ளேன்; ஆதாரம் போதுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சரமாரித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஏராளமான கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன.
ஈரான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் நடுவானில் வழிமறித்து அழித்தது. இதற்கிடையே, அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், போர் நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகு பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில், அவர் கையை அசைக்கும் போது ஆறு விரல்கள் இருந்ததும் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்த வதந்திகளை மறுத்தளித்த இஸ்ரேல் அரசு, பிரதமர் நெதன்யாகு நலமுடன் இருப்பதாக விளக்கமளித்திருந்தது. அதேநேரம், நெதன்யாகு இன்னும் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவரை குறி வைத்து தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் காஃபி ஆர்டர் செய்து பருகுகிறார். மேலும் அந்த வீடியோவில், “என் மக்களுக்காக நான் ‘உயிரை விடத் தயாராக’ இருக்கிறேன்; என் விரல்களை எண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களா? இங்கே பாருங்கள்… எல்லாம் சரியாக இருக்கிறது. உயிருடன் உள்ளேன், ஆதாரம் போதுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Mar 15, 2026 10:17 PM IST

