Last Updated:
பாகுபாடுகளைத் தடுக்க உருவாக்கப்பட்ட புதிய விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங், பாலியல் துன்புறுத்தல், சாதி, பாலினம், மாற்றுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் பாகுபாடுகளைத் தடுக்க உருவாக்கப்பட்ட புதிய விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் ரோஹித் வெமுலா, பாயல் தத்வி உள்ளிட்டோரின் தற்கொலைகளைத் தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டைத் தடுக்க வலுவான விதிகள் உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு விதிகளை மாற்றியமைத்து கடந்த 13 ஆம் தேதி புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழுவான UGC வெளியிட்டது.
அதில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் என்பது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு எதிரான செயல்பாடுகளை மட்டுமே குறிக்கும் என்ற புதிய விதி, எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. பொதுப்பிரிவு அல்லது முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் சாதி ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதால் இந்த புதிய விதியை மாற்றியமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யூஜிசியின் விதிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய விதிகளுக்கு எதிராக டெல்லி, லக்னோ, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, ராஜஸ்தானில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்று உறுதி அளித்தார்.


