சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாது
சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை. பௌத்தமதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின்
உரிமையையும் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
உத்தேச வாடகை வருமானச் சட்டமானது அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஜனாதிபதி, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
“சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
மேலும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிரான கமலாவதி வழக்கில் தேசியக் கொள்கையை அமைச்சரவையின் அதிகார வரம்பிற்குள் மாத்திரம் பரிசீலித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அது பாராளுமன்றத்தின் செயற்பாடாகும். இது அரசியல் விவகாரம். இதில் உயர்நீதிமன்றம் எந்த வகையிலும் தீர்ப்பளிக்க முடியாது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர்கள் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைக்குள் நுழைவதாக அமையும்.
இரண்டாவதாக, பெண்களின் சமத்துவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்து ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிரோஷன் அபேகோன் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான ரத்நாயக்க தரங்க லக்மாலி வழக்கு விசாரணையில், மக்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வு அடிப்படை உரிமையாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பத்து நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையிலான சரத் ஜயசிங்க உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தின் பெறுமதியை அறிய, அதன் விளக்க உரைகளை மட்டும் நம்பியிருப்பது போதுமானதல்ல.
சமத்துவக் கொள்கையை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடு அநீதியை தடுப்பதாக அமையுமென நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வழங்கிய, கருணாதிலக்க ஜெயலத் டி சில்வா வழக்குகளும் உள்ளன. அதனால் பாகுபாடு – பாரபட்ச செயற்பாடுகளுக்கு கடுமையாக எதிர்ப்பு வௌியிடப்படுகிறது.
இறுதியாக, பிரதம நீதியரசர் வழங்கிய குற்றவியல் சட்டத் திருத்தம் தொடர்பான விசேட தீர்மானமும் புறக்கணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் நாம் பெண்கள் வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான சமத்துவம் பற்றிப் பேசுகிறோம்.
ஆனால் ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின்படி சிறுபான்மையினரும் பாகுபாடு இன்றி அரச சேவைகளைப் பெறக்கூடிய இயலுமை இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகளின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் சாதாரண அதிகாரங்களுக்கமைய அவற்றை செயற்படுத்த வேண்டும்.
ஆனால் இந்தத் தீர்மானம் இந்த அதிகாரங்கள் எவற்றையும் கண்டுகொள்ளாத வகையில் அமைந்துள்ளது. ஒருபுறம் நீதிமன்றம் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு இதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறிவருகிறது. இதனால், முன்னைய தீர்ப்புகள் அனைத்தும் கேள்விக்குறியாகின்றன. நீதிமன்றம் வழங்கிய முந்திய தீர்ப்புகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.
எனவே இது நீதித்துறைக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்துவிட்டு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதைப்போல் உள்ளது. ஆனால் இந்த சபையில் அதைச் செய்ய முடியாது. பத்து நீதிபதிகள் கொண்ட குழுவையும் பிரதம நீதியரசரையும் மிஞ்சி அவர்கள் செயற்ட முடியுமா?
இந்தச் சட்டம் ஒரே பாலின திருமணம் மற்றும் பாலின சமத்துவத்தை அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் இந்த சட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு இடமளிக்கவும் கூடாது. அனைத்து சட்டங்களிலும் காணப்படும் சாதாரண சரத்துக்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவற்றை நாம் உள்ளடக்கவில்லை. சட்டமூலத்தை சட்டமா அதிபரே இறுதி செய்கிறார்.
அத்தோடு முழுமையாக பிரிவெனா கல்விச் சட்டத்தை இதனால் ஒதுக்கிவிட முடியும் என்று கூறப்படுகிறது. எந்த அடிப்படையில் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் பௌத்த மதத்தின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த சட்டத்தை தயாரித்து அதை நடைமுறைப்படுத்த பங்களிப்பு வழங்கிய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதுபற்றி தெரியும். அந்தச் சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதைப் போன்ற ஒரு சிறிய ஏற்பாடு அதை மாற்றும் என்று நினைக்கிறீர்களா? அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சொற்பதங்களை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
இந்த சபைக்கு வருவதற்கு முன் தாங்கள் விகாரைக்கோ, பிரிவெனாவிற்கோ சென்று இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த சபையில் மகாசங்கத்தினரும் உள்ளனர். எனவே அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த உரிமைகள் மற்றும் பௌத்தர்களின் அனைத்து உரிமைகள் ஒரு சிறிய பகுதிகளை கொண்டு பறிக்கப்படலாம். என்ன நடக்கப் போகிறது? பௌத்த மதத்திற்கான அனைத்து பாதுகாப்புகளும் அகற்றப்படும்.
இறுதியாக, உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினை திரும்பிப் பார்க்க வேண்டும். எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்புச் சபை மற்றும் அது கட்டமைக்கப்பட்ட 1972 அரசியலமைப்பின் மூலம் நியாயப்படுத்தப்பட வேண்டும். அதனால் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது. அதன் பெறுமதி பற்றிய ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்.
இது இந்த சபை அனுமதிக்கக் கூடாத சிக்கலான தீர்ப்பாகும். மேலும் இது குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழுவை நியமிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அதற்காக நீதிபதிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கலாம். அந்த தெரிவுக்கு அதிகளவில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
இருப்பினும், இது பெண்கள் சார்ந்த விடயம். இதனால், இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மேலும், மற்றுமொரு பெரும்பான்மையாக உள்ள பௌத்தர்களின் பாதுகாப்பு அரசியலமைப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. எனவே இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சபை தனது உரிமைகளை உறுப்படுத்த வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அடக்கம் செய்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயின்போது இடம்பெற்ற விடயங்கள் என்ன என்பது பற்றி நிறைய கலந்துரையாடல்களும் மனவேதனைகளும் ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். அந்த விடயத்தில் நானும் தலையிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை நிறுத்தின.
அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது.
ஆனால் பின்னர் உயர்நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்றுவழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டன.
மேலும், இவை அனைத்தையும் நாம் எதிர்கொண்டோம். இந்த நாட்டில் அடக்கப்படுவதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்.
எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவபீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.
இந்தக் காலக்கட்டத்தில், முக்கியமாக முஸ்லிம் மக்களுக்குப் மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள். எனவே நடந்ததற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது தொடர்பாக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு இந்தச் சபை ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்.
மக்களின் இறையாண்மை பேணப்பட வேண்டும். அந்த இறையாண்மை பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியிடம் உள்ளது. இந்த நேரத்தில் இரண்டு நிறுவனங்களும் ஒரே இடத்தில் உள்ளன. பாராளுமன்றத்தின் மூலம் நீதித்துறைக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதைத்தான் 1971 தேர்தலில் முடிவு செய்தோம்.
கடந்த காலத்தைப் பற்றிப் பேச நான் இங்கு வரவில்லை. எனக்கு அது தேவையில்லை. ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டபோது யார் கதைத்தார்கள் என்று தேவைப்பட்டால் என்னால் கூற முடியும். அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் கலந்துரையாடி முன்னோக்கிச் செல்லலாம். இங்கு அடிப்படைவாதம் தேவையில்லை.

&w=1200&resize=1200,675&ssl=1)