திடீரென ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், ஏதேனும் ஒரு வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நவீன் சந்திர திவாரி இது குறித்து பேசுகையில், “இறந்தவர்களில் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மீதமுள்ள ஐந்து பேரின் மரணம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடந்துள்ளன” என்றும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத்துறை 11 பேரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது, அதில் மூன்று மாதிரிகள் டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன. டாக்டர் திவாரி மேலும் கூறும்போது, “தண்ணீர் மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம், இரத்த மாதிரிகளும் டைபாய்டு தொற்றை உறுதிப்படுத்தின. இதனால் நீர் மாசுபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்றார்.
அதிகாரிகள் உடனடியாக குடிநீர் விநியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமவாசிகள் கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகரித்துவரும் நோய்த்தொற்று கவலைக்கிடமான விஷயமாக மாறியுள்ளதால், சுகாதாரத்துறை பிபாடி, பூலை ஜாகேஷ்வர், கேதி, பஜேலா, கப்ரி மற்றும் கோலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமங்களில் 16 மருத்துவக் குழுக்களை நியமித்துள்ளது.
இந்தக் குழுக்களில் ஆஷா பணியாளர்கள், சமூக சுகாதார அலுவலர்கள் (CHO), மருந்தாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் சுகாதார கல்வி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதில், இரண்டு மாரடைப்பால், மூன்று வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டின் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சுகாதார அதிகாரிகள், இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத ஒரு புதிய வகை வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். “குமாவோன் பகுதியில் இவ்வகை வைரஸ் தொற்று பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்மமான மரணங்களும், திடீர் வைரஸ் பரவலும் அல்மோரா மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமவாசிகள் தற்போது தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
October 18, 2025 1:18 PM IST

