Last Updated:
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துகளை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திரா தனது சொத்துகளை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி நரசிம்ஹா, சந்துர்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அமலாக்கத்துறைக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனால், அமலாக்கத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் முறையிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணப்பரிமாற்ற சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். சொத்துகள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்பு மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவிற்கு மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களோடு இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
December 13, 2025 9:26 PM IST


