Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திதர்வாடா கிராமம் அமைந்துள்ளது. இரவில் வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் கிராம மக்கள் சிலர் வீதியோரம் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது, இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. திடீரென அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி வந்து, வானத்தை நோக்கி கண்டபடி சுட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சென்ற அடாவடி கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. தோட்டாக்களைத் தெறிக்கவிட்ட கைகளுக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுக்கப்படுமா?
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ‘பாபா கேங்’ ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இளைஞர் ஒருவரின் வீட்டைச் சுற்றிவளைத்த ரவுடிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில், வீட்டின் சுவர் மற்றும் வாகனத்தைத் தோட்டாக்கள் துளைத்துள்ளன. தகவல் அறிந்து போலீசார் பறந்து வந்ததும் அடாவடி கும்பல் தலைதெறிக்க ஓடியுள்ளது. பதைபதைக்க வைத்த ரவுடிகளுக்குச் சிறை விருந்து அளிக்கப்படுமா?
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திதர்வாடா கிராமம் அமைந்துள்ளது. இரவில் வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் கிராம மக்கள் சிலர் வீதியோரம் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது, இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. திடீரென அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி வந்து, வானத்தை நோக்கி கண்டபடி சுட்டுள்ளார். அதைப்பார்த்ததும் அங்கு குளிர்காய்ந்து கொண்டிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அடுத்தடுத்து இறங்கிய நபர்கள் அருகில் உள்ள சர்வார் என்பவரின் வீட்டின் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். அப்போது, உள்ளே இருந்த குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் மறைந்து கொண்டனர். உயிர் பயத்தில் இருந்தபோதும், சமயோசிதமாக செயல்பட்டவர்கள் தாக்குதல் தொடர்பாக போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அருகில் இருந்த கார் உள்ளிட்டவற்றின் மீதும் தோட்டாக்களைத் தெறிக்கவிட்டனர். அதில், இருவரின் துப்பாக்கி பழுதாகி செயல்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதற்குள் போலீசார் வருவதை அறிந்த ரவுடிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி தப்பினர்.
ஏற்கனவே, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இதே கும்பல் சர்வாரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அதில், கையில் குண்டடிபட்ட சர்வார், நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ரவுடி ஜுனைத் என்பவரின் தலைமையிலான ‘பாபா கேங்’ தான் தொடர்ந்து சர்வார் மற்றும் அவரது குடும்பத்தை டார்கெட் செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், தாக்குதல் தொடுத்ததற்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. தப்பியோடிய குற்றவாளிகள் பிடிபட்டால்தான் உண்மை தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கியைக் காட்டி கொலை முயற்சி – ரவுடிகளுக்கு சிறை விருந்து கிடைக்குமா…?


