Last Updated:
பவுலருக்கு உதவி செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனை வங்கதேச கேப்டன் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் செய்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2 ஆவது போட்டி டாக்காவில் நடந்தது.
இதில் பாகிஸ்தான் வீரர் சல்மான் அகா ரன்-அவுட் ஆன விதம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 39-வது ஓவரில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், சல்மான் அகா மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி 109 ரன்கள் சேர்த்து அணியை மீட்டுக்கொண்டிருந்தது.
அந்த ஓவரை வீசிய வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸின் பந்துவீச்சில், ரிஸ்வான் பந்தை மெதுவாகத் தட்டிவிட்டார். பந்துவீச்சாளரின் ஃபாலோ-த்ரூவில் பந்தைத் தடுத்த மிராஸ், எதிர்பாராதவிதமாக நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த சல்மான் அகா மீது மோதினார்.
இந்த மோதலில் பந்து அருகிலேயே நின்றது, சல்மான் அகா நிலைதடுமாறி தனது கிரீஸை விட்டு வெளியே தள்ளப்பட்டார். இந்தச் சூழலில், கிரீஸிற்குள் திரும்புவதற்கு முன்பாக, கீழே கிடந்த பந்தை எடுத்து மிராஸிடமே கொடுப்பதற்காக சல்மான் அகா குனிந்தார்.
ஆனால், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மிராஸ், மின்னல் வேகத்தில் பந்தை எடுத்து ஸ்டம்புகளைச் சாய்த்து அவுட் என்று அப்பீல் செய்தார். பந்து ‘டெட் பால்’ ஆகாத நிலையிலும், பேட்டர் கிரீஸிற்கு வெளியே இருந்ததாலும், மூன்றாவது நடுவர் விதிமுறைப்படி சல்மான் அகா ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந்தச் செயல் சல்மான் அகாவை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. உதவி செய்ய நினைத்த தன்னை அவுட் செய்ததற்காக மிராஸுடன் அவர் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிராஸின் இந்தச் செயல் ‘கிரிக்கெட் உணர்விற்கு’ எதிரானது என்று ஒரு தரப்பினரும், சர்வதேச போட்டிகளில் கிரீஸைப் பாதுகாப்பது ஒரு வீரரின் அடிப்படைப் பொறுப்பு என்று மறுதரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Mar 13, 2026 11:59 PM IST


