Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தென்காசி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதை பாராட்டி தவெகவினர் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். திமுகவுக்கு எதிராக எதிர் போராட்டத்தில் தவெகவினர் ஈடுபட்டு வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் கைது அவர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தவெக மகளிர் அணி நிர்வாகி சார்பாக தஞ்சை காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காலையிலேயே நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு முன் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு வந்துவிட்டார்.
தொடர்ந்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டே உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குள் சென்றார். உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் முயற்சித்த தகவல் அறிந்து, திமுகவினரும் அதிகளவில் அந்தப் பகுதியில் கூடினர். பின்னர் சபரீசன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருந்தாலும் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். போலீசார் வாகனத்தில் ஏற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த தவெக அரசு தரப்பில் அதிரடிப் படை இறக்கிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தென்காசியில் உதயநிதி ஸ்டாலினின் கைதை தவெகவினர் இனிப்பு கொடுத்து வருகின்றனர். திமுகவினரின் போராட்டத்திற்கு எதிராக தவெகவின் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கு திரண்டவர்களுக்கு இனிப்பு கொடுத்தும் கொண்டாடினர். இந்த வீடியோ தவெகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


