Last Updated:
ஆர்மீனியாவிலிருந்து ஜார்ஜியாவுக்குள் நுழைய முயன்ற 56 இந்தியர்கள் 5 மணி நேரம் அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் பெற்றுள்ளது.
ஆர்மீனியாவிலிருந்து, ஜார்ஜியாவுக்குள் நுழைய முயன்ற 56 இந்தியர்கள், சரியான ஆவணங்கள் வைத்திருந்தும், உணவு, கழிப்பறை வசதிகள் இன்றி 5 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டது இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயத்துக்கு முரணான இந்த அணுகுமுறைக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவுக்குள் நுழைய முயன்ற 56 இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், மனிதநேயத்துக்கு முரணான சூழ்நிலையை தாங்கள் எதிர்கொண்டதாக சமூக வலைதளங்களில் தங்களது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். ஆர்மீனியாவிலிருந்து சதக்லோ எல்லை வழியாக நுழைய முயன்ற இவர்கள், செல்லுபடியாகும் இ-விசா மற்றும் தேவையான ஆவணங்களை வைத்திருந்தும், எந்தவித காரணமும் சொல்லாமல் ஜார்ஜிய அதிகாரிகள் அவர்களை 5 மணி நேரம் வரை காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான துருவி படேல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ மற்றும் குறிப்புகள் தற்போது வைரலாகியுள்ளது. அவர் தனது அனுபவத்தை பகிர்ந்த போது, “நாங்கள் 5+ மணி நேரம் உறைபனி குளிரில் காத்திருந்தோம். எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை, கழிப்பறை வசதியும் இல்லை. அவர்கள் எங்களது பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்து, எந்தத் தகவலுமின்றி நடைபாதையில் விலங்குகளைப் போல உட்கார வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஜார்ஜிய அதிகாரிகள் பயணிகளை “குற்றவாளிகளைப் போல” வீடியோ எடுத்ததாகவும், ஆனால் சம்பவத்தை படமாக்குவதற்கு தடை விதித்ததாகவும் குற்றம் சாட்டினார். “செல்லுபடியாகும் விசாக்கள் இருந்தும், அவை ‘தவறானவை’ என்று கூறி எங்களை நுழைய விடாமல் மறுத்தனர். இது வெட்கக் கேடானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான அணுகுமுறை” என்று துருவி படேல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும், இது தனிப்பட்ட சம்பவமல்ல, ஜார்ஜியாவில் இந்தியர்கள் அவமதிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சமூக ஊடக யூசர், “இது போன்ற அனுபவங்களைப் பற்றி நான் ஏற்கனவே பல பதிவுகளைப் பார்த்துள்ளேன். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோசமான நடைமுறை” என்று கண்டனம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சம்பவம், இந்தியர்களுக்கு ஜார்ஜியாவில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்திய பயணிகள் மீதான இந்த அவமதிப்பு சம்பவத்திற்கு இந்திய அரசு எப்படிப் பதிலளிக்கும், ஜார்ஜிய அதிகாரிகள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்திருக்கிறது. இந்த சம்பவம், சர்வதேச பயணங்களில் இந்தியர்கள் சந்திக்கும் சவால்களை வெளிப்படுத்துவதோடு, வெளிநாட்டு அதிகாரிகளின் பொறுப்பின்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
September 21, 2025 6:47 PM IST
உணவு, கழிப்பறை வசதிகள் இன்றி இந்த நாட்டில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட இந்தியர்கள் – வைரல் பதிவு


