Last Updated:
ஏற்கனவே, இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி உள்ளிட்ட பலர் உணவகங்களை நடத்தி வருகிறார்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பிரபல வீரர் ஒருவர் உணவகத்தைத் தொடங்கியுள்ளார். அவருக்கு ரசிகர்களும் சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது முதன்மை விளையாட்டாக மாறியுள்ளது. தேசிய அணியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள். கிரிக்கெட் வீரர்களின் பர்சனல் பக்கங்களைத் தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது.
மேலும், கிரிக்கெட் வீரர்கள் போட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர்த்து, பல்வேறு விளம்பரங்களில் இடம் பெறுவதன் மூலமாகத் தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். இதேபோன்று பிரபலமாக உள்ள சூழலைப் பயன்படுத்தி, பல வீரர்கள் தங்களுக்கு புதிய பிசினஸ்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது சிராஜ் உணவகத்தைத் தொடங்கியுள்ளார். ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஹைதராபாத் நகரின் மையப் பகுதியில் Joharfa ஜோகர்பா என்ற உணவகத்தை ஆரம்பித்துள்ளார். அதற்கு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த சிராஜ், இந்த உணவகம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ஹைதராபாத் நகரம் தான் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தது. இங்கு வரக்கூடிய மக்களுக்குச் சிறப்பான ஒன்றை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
அந்த வகையில், இந்த உணவகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இங்கு வழங்கப்படும் புதுவித உணவுகளை உண்டு மகிழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பாரம்பரிய சமையல் முறைப்படி, புதியனவான மற்றும் உயர்ந்த தரத்துடன் உணவுப் பொருட்களைச் சேர்த்து இங்கு உணவுகள் உருவாக்கப்படும் என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணர்களால் இந்த உணவகம் கையாளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
July 01, 2025 1:39 PM IST