Last Updated:
போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஐந்து வார சிகிச்சைக்குப் பிறகு, போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாடிகனை மையமாகக் கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தற்போதைய தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். 88 வயதான பிரான்சிஸ் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி போப் பிரான்சிஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ரோமில் உள்ள ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்றுகளால் போப் அவதிப்பட்ட நிலையில், அவருக்கு இரட்டை நிமோனியா பாதிப்பு என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 5 வாரங்கள் போப் பிரான்சிஸ் சிகிச்சையில் இருந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குறிப்பாக அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு வெளியே பலர் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
இருமுறை சிக்கலான நிலைக்கு சென்ற நிலையில், வயது மூப்பு காரணமாக போப் குணமடைவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அங்குள்ள சிற்றாலயத்தில் பிரார்த்தனை செய்த ஒரே ஒரு படத்தை மட்டுமே வாடிகன் வெளியிட்டது.
இதையும் படிக்க: “இந்தி மொழியை பயன்படுத்தி இந்தியா முன்னேறலாம்” – ஜோகோ நிறுவன முதன்மை இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு
இந்நிலையில் போப் உடல் நிலை தேறிய நிலையில், ஜெமல்லி மருத்துவமனையின் பால்கனியில் வீல் சேரில் அமர்ந்தவாறே அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கைகளை அசைத்தார். சற்று தளர்ந்த நிலையில் இருந்தாலும், கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு, தாம் மஞ்சள் பூக்களை வைத்திருக்கும் பெண்ணை பார்க்க முடிவதாக கூறினார்.
போப் முழுமையாக உடல்நலம் தேற 2 மாத காலம் ஆகும் என அவரது மருத்துவர் தெரிவித்த நிலையில் மீண்டும் வாடிகனுக்கு திரும்பியுள்ளார்.
March 24, 2025 6:52 AM IST
உடல்நிலையில் முன்னேற்றம்..! டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் போப் பிரான்சிஸ் – கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி


