Last Updated:
உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா, வழக்கு ஒன்றில் தமிழில் விசாரணை நடத்தினார்.
தமிழ்நாட்டுப் பெண்ணின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா, தமிழில் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜாமீன் கோரி நவீன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவீன் மற்றும் அவரது பெற்றோர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜரான நிலையில், அவரிடம் கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவரான நீதிபதி நாகரத்னா தமிழில் விசாரணை நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருமணம் முடிந்து அந்தப் பெண்ணை நல்லப்படியாக பார்த்துக் கொள்வீர்களா என நீதிபதி நாகரத்னா கேட்டபோது, சிறையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரான நவீன் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என தமிழில் பதில் கொடுத்தார்.
பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட நவீனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி நாகரத்னா, பெங்களூருவில் வசித்தபோது தனது பக்கத்து வீட்டில் வசித்த தமிழ் குடும்பத்தினரிடம் தமிழ் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
August 29, 2025 10:01 PM IST


