இந்த மாற்றங்கள், உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எப்போது முழுமையாக அல்லது குறிப்பிட்ட அளவை எடுக்கலாம் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
குறைந்த விதிகள் – குறைந்த குழப்பம்
முன்னதாக, பிஎஃப் பணம் எடுப்பதற்கு சுமார் 13 விதமான பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை மாறுபடும் சேவை கால நிபந்தனைகள் இருந்ததால், பொதுமக்களுக்கு அவற்றை புரிந்துகொள்வதே கடினமாக இருந்தது.
புதிய திருத்தங்களின் கீழ், EPFO இந்த 13 பிரிவுகளை 5 முக்கிய பிரிவுகளாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் விதிகள் தெளிவாகவும், அதன் செயல்முறை எளிமையாகவும் மாறியுள்ளது.
ஓராண்டு சேவை போதும்
கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமான ஒன்று, குறைந்தபட்ச சேவை காலத்தை பொதுவானதாக நிர்ணயித்தது தான். பெரும்பாலான பகுதி அளவு பணம் எடுத்தலுக்கு, இப்போது உறுப்பினர்கள் 12 மாதங்கள் (ஒரு ஆண்டு) வரை சேவை செய்திருந்தாலே போதும்.
முன்பு, பணம் எடுக்கும் காரணத்தைப் பொறுத்து சேவை காலம் மாறுபட்டதால் ஏற்பட்ட குழப்பம், இந்த புதிய விதியால் நீக்கப்பட்டுள்ளது.
அதிக பிஎஃப் தொகையை எடுக்க அனுமதி
முன்னதாக, பகுதி அளவாக எடுக்கப்பட்ட பிஎஃப் தொகை பெரும்பாலும் ஊழியரின் சொந்த பங்களிப்பிற்காக மட்டுமே எடுக்கும்படியான வரம்பு இருந்தது. அதுவும் 50% அல்லது 100% என்கிற உச்சவரம்புடன் இருந்தது.
புதிய விதிகளின்படி, ஊழியர் மற்றும் நிறுவனம் என இருவரின் பங்களிப்புகளும் மற்றும் அதற்கான வட்டியையும் சேர்த்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், உறுப்பினர்கள் தங்களின் மொத்த பிஎஃப் இருப்பில் இருந்து 75% வரை எடுக்க முடியும்.
100% பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்?
EPFO விதிகளின்படி, ஓராண்டு சேவைக்குப் பிறகு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் 100% பிஎஃப் தொகையை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
– உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகள்
– கல்விச் செலவுகள்
– திருமணச் செலவுகள்
– வீடு வாங்குதல் அல்லது கட்டுதல்
– வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல்
– பெரிய அளவிலான வீட்டின் பழுதுபார்ப்பு பணிகள்
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், காரணம் குறிப்பிடாமல் கூட பணம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால், ஒரு நிதியாண்டில் எத்தனை முறை இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகள்
பிஎஃப் விதிகள் அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கினாலும், நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்க EPFO சில கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வைத்துள்ளது. அடிக்கடி பணம் எடுப்பதைத் தடுக்க, பிஎஃப் இருப்பில் சுமார் 25% தொகை பாதுகாக்கப்படும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடிக்கடி பணம் எடுப்பதால், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள், கூட்டு வட்டியின் நீண்ட கால பலன்களை இழக்க நேரிடும் என்பதை EPFO கவனத்தில் கொண்டுள்ளது.
வேலையின்மையின் போது நிவாரணம்
வேலையை இழந்த உறுப்பினர்களுக்கும் இந்த விதிகள் நிவாரணம் அளிக்கின்றன. வேலை இழந்த உடனேயே, பிஎஃப் இருப்பில் இருந்து 75% வரை எடுத்துக்கொள்ளலாம். அதுவே, தொடர்ந்து ஒரு வருடம் வரையில் வேலை கிடைக்காவிட்டால், மீதமுள்ள தொகையையும் முழுமையாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், 55 வயதில் ஓய்வு, நிரந்தர உடல் ஊனம், பணிநீக்கம், விருப்ப ஓய்வு, வெளிநாட்டில் நிரந்தர குடியேற்றம் போன்ற சூழ்நிலைகளிலும் 100% பிஎஃப் தொகையை திரும்பப் பெற முடியும்.
ஓய்வூதிய விதிகளில் மாற்றமில்லை
புதிய பிஎஃப் பணம் எடுக்கும் விதிகள், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து விலகும் உறுப்பினர்கள் ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறலாம். மாதாந்திர ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை என்பது இன்னமும் கட்டாயமாகும்.
இவ்வாறாக, எளிமைப்படுத்தப்பட்ட EPFO விதிகள், பிஎஃப் பணம் எடுக்கும் செயல்முறையை வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது பிஎஃப் பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், குறுகிய கால தேவைகளையும், நீண்ட கால ஓய்வூதியப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும்.

