மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் –
ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இது அதிபர் ட்ரம்ப்புக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. தொலைதூரம் சென்றும் தாக்கும் அமெரிக்காவின் டொம ஹாக் ஏவுகணையை, உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – அதிபர் ட்ரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறுவதாக
இருந்தது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், அதிபர் ட்ரம்ப்புடன் நேற்று முன்தினம் போனில் பேசினார். அப்போது, உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்தித்து பேசலாம் என இருவரும் முடிவு செய்தனர்.
இந்த பேச்சு குறித்து ரஷ்ய அதிபரின் கிரம்ளின் மாளிகை விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அதிபர் ட்ரம்பிடம், அதிபர் புதின் போனில் பேசிய விவரங்கள் ஊடகத்திடம் தெரிவிக்கப்படாது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்பிடம், அதிபர் புதின் கூறினார். இது தொடர்பாக இருவரும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்தித்து பேசுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – காசா அமைதி பிரச்சினையில் ஏற்பட்ட வெற்றி, ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என நம்புகிறேன். ரஷ்ய அதிபர் புதினும், நானும், ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் சந்திக்கவுள்ளோம். அப்போது உக்ரைன் பிரச்சினை முடிவுக்கு வரலாம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளேன். அப்போது அதிபர் புதினுடன் பேசிய விஷயங்கள் குறித்தும்,
இதர விஷயங்கள் குறித்தும் பேசப்படும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.