Last Updated:
ரஷ்யா வான் வழி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள உக்ரைன் அரசு, பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் ஆயுத ஆலைகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா வான் வழி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசு, பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே சுமார் நான்கு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகள், எரிசக்தி நிறுவனங்கள், ராணுவத்தால் பயன்படுத்தப்படும் துறைமுகங்களை குறிவைத்து ராக்கெட்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
தங்கள் நாட்டு பொதுமக்கள் மீது உக்ரைன் அண்மையில் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஸ்லோபோஜான்ஸ்கே, குபியன்ஸ்க், போக்ரோவ்ஸ்க் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய பீரங்கிகளை அழித்து, 10-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையான 585 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி செயலிழக்கச் செய்ததாகக் கூறியுள்ளது.
ரஷ்ய படைகள் முதன்மையாக தங்கள் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்ததாகவும் இதில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்கு உள்ளானதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதில், பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
December 07, 2025 3:56 PM IST


