அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, ஈரானியத் தலைமைக்குள் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைப் பதவியிலிருந்து நீக்கக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை தளமாக கொண்ட கொண்டு இயங்கும் ஒரு பாரசீக மொழி செய்தி ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈரான் ஜனாதியின் அதிகாரம்
அமெரிக்காவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்காக, அராக்சி அந்நாட்டு ஜனாதியின் அதிகாரத்தைப் புறக்கணித்ததாக அவ்விரு தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அராக்சி தங்களைப் புறக்கணித்துவிட்டதாகவும், அரசாங்கக் கொள்கைகளைச் செயல்படுத்தும் பொறுப்புள்ள ஒரு அமைச்சராகச் செயல்படாமல், ஐ.ஆர்.ஜி.சி தளபதி அஹ்மத் வாஹிதியின் உதவியாளராகவே அதிகம் செயல்பட்டு வருவதாகவும் பெஷேஷ்கியனும் காலிபாஃபும் நம்புவதாக கருதப்படுகிறது.
மேலும், பெஷேஷ்கியனுக்குத் தெரிவிக்காமல், ஐ.ஆர்.ஜி.சி தலைவரின் உத்தரவின் பேரில் அராக்சி செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் விரக்தியடைந்த பெஷேஷ்கியன், இது தொடர்ந்தால் அராக்சியைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று தனது பங்காளிகளிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையின் பின்னணி
இவ்விவகாரம் குறித்து ஈரான் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை, மேலும் இந்தக் கூற்றுகளுக்கு ஈரானிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இஸ்லாமியக் குடியரசின் நிர்வாகத்திற்குள் குறிப்பிடத்தக்க பிளவுகள் இருப்பதாகக் கூறும் முந்தைய அறிக்கையின் பின்னணியில் இந்த சமீபத்திய நிகழ்வுகள் வந்துள்ளன.
பெஷேஷ்கியனுக்கும் வாஹிதிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்து மார்ச் 28 அன்று முதன்முதலில் செய்தி வெளியாகியது.
போரைக் கையாண்ட விதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றில் அது ஏற்படுத்திய அழிவுகரமான விளைவுகளே இந்த சர்ச்சைக்குக் காரணம் என இந்த செய்தியில் விவரிக்கப்பட்டிருந்தது.
பலவீனமான போர் நிறுத்தத்தை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தை முட்டுக்கட்டைக்கு, ஈரானிய தலைமைத்துவ நெருக்கடியும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
மேலும், பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்ற ஈரானிய தூதுக்குழுவிற்கு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முழு அதிகாரம் இல்லாததால் அமெரிக்கர்கள் விரக்தியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

