Last Updated:
ஈரான் மற்றும் லெபனான் மீது மீண்டும் புதிய தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மட்டுமல்லாமல் அந்நாட்டின் 40க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மட்டும்ன்றி பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரசு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது.
அதனையடுத்து ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கு புதிய உயர் தலைவரை தேர்வு செய்வதற்காக 88 பேர் கொண்ட குழு கோம் நகரில் கூடிய இஸ்லாமிய புரட்சிகரப் படைக் கட்டடத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளன. அதில் சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேபோல டெஹ்ரானில் உள்ள மஹ்ராபாத் விமான நிலையத்திலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழித்தது. அத்துடன் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் ஆயுதங்கிடங்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் எல்லாம் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய ராணுவத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரில், அமெரிக்காவை இஸ்ரேல் உள்ளிழுக்கவில்லை என கூறியுள்ள டிரம்ப், ஈரானுக்கு புதிய தலைமை தேவை என்ற அடிப்படையிலேயே அனைத்தும் நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் தாக்குதல்களை சந்தித்தபோதும் சற்றும் சளைக்காத ஈரான், எதற்கும் அஞ்சமாட்டோம் என மீண்டும் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் கத்தார் தலைநகர் தோஹா உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை போர்ச்சூழல் காரணமாக ஈரான் மூடியுள்ளது. தடையை மீறி கப்பல்கள் சென்றால் தீவைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. எனினும் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெயை எடுத்துச்செல்ல முடியாமல் 700 கப்பல்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவில் அடுத்த 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த போர் காரணமாக இந்தியாவில் எரிபொருட்கள் விலை உடனடியாக உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ஈரானில் அணு ஆயுதத் தயாரிப்புகள் நடைபெறுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை என ஐநா சபை தெரிவித்துள்ளது. ஐநாவின் இந்தக் கருத்து, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

