-முயிஸ் வஹாப்தீன்-
இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் ஈரானை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மோதல், ஒரு சாதாரணபிராந்திய இராணுவ மோதலாக மட்டுமே கருதப்பட முடியாது. அது உலக அரசியல் கட்டமைப்பின்அடிப்படைகளையே சோதிக்கும் ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணமாக உருவெடுத்து வருகிறது. இரண்டாம்உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச ஒழுங்கு (World Order) சர்வதேச சட்டம், பொதுவானவிதிமுறைகள், பல்தரப்பு (Multilateralism) நிறுவனங்களின் கூட்டு முடிவெடுப்பின் மூலம் உலக அமைதி மற்றும்பாதுகாப்பை நிலைநாட்டும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த உலக ஒழுங்கே புதியசவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த உலக ஒழுங்கின் மையக் கருத்தாக விளங்குவது பல்தரப்பு முறை (Multilateralism) ஆகும். பல்தரப்பு முறைஎன்பது நாடுகள் தனிப்பட்ட சக்தி அரசியலின் பாதையில் செல்லாமல், ஒத்துழைப்பு, கூட்டு முடிவெடுப்பின் வழியாகசர்வதேச பிரச்சினைகள், மோதல்களை தீர்க்க முயலும் ஒரு அரசியல் அணுகுமுறையாகும். இதில் நாடுகள்பொதுவான விதிமுறைகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற உலகளாவியநிறுவனங்களின் வழியாக ஆலோசித்து கூட்டு முடிவுகளை எடுப்பதன் மூலம் உலக அமைதியையும்நிலைத்தன்மையையும் பாதுகாக்க முயல்கின்றன.
ஆனால் தற்போதைய உலக அரசியல் நிதர்சனம் இந்த பல்தரப்பு அமைப்பின் செயல்திறனைப் பற்றி தீவிரமானகேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஈரான் மோதல் உலக ஒழுங்கின் பலவீனங்களையும் முரண்பாடுகளையும்வெளிப்படையாக வெளிக்கொணர்கிறது.
உலக அமைதிக்கான முக்கிய மேடையாகக் கருதப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பல்தரப்புஅமைப்புகள் இன்று பல சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிலவும் Veto அதிகார அரசியல் காரணமாக பல முக்கிய சர்வதேச தீர்மானங்கள் முடங்கிக் கொண்டிருக்கின்றன. இதன்விளைவாக சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பல சமயங்களில் செயல்படுத்த முடியாத நிலைஉருவாகியுள்ளது.
இது வெறும் நடைமுறைச் சிக்கல் மட்டுமல்ல; நம்பிக்கை இன்மையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அமல்படுத்தப்படுகிறதா? அல்லது அரசியல்சக்திகளின் நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் உலக தெற்குப் பகுதிகளிலும் (Global South), மேற்கத்திய அரசியல் மையங்களிலும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் மோதல் பல்தரப்பு முறையின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முக்கிய சோதனைக்கல்லாகமாறியுள்ளது. உலக நிறுவனங்கள் இன்னும் நம்பகமான சமரச மேடையாக செயல்பட முடியுமா? அல்லது உலகஅரசியல் மீண்டும் அதிகார அரசியல் மற்றும் போட்டி கூட்டணிகளின் பாதையில் நகருகிறதா? என்ற கேள்விஎழுகிறது.
அதே நேரத்தில், பிராந்திய அமைப்புகளின் பங்கு குறித்தும் புதிய விவாதங்கள் உருவாகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம்(AU), ஆசியான் (ASEAN), மற்றும் அரபு லீக் போன்ற அமைப்புகள் தங்களது பிராந்தியங்களில் மோதல்களைசமாளிப்பதில் அதிக செயல்திறனுடன் செயல்பட முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில், பெரிய சக்திகளுக்கிடையிலான (Great Power Rivalry) போட்டி மீண்டும்ஒரு முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது. பாரம்பரிய கூட்டணிகள் மாறிக்கொண்டிருக்கின்றன; புதிய புவியியல்அரசியல் கூட்டணிகள் உருவாகின்றன. பல நாடுகள் பாரம்பரிய பல்தரப்பு அமைப்புகளின் வெளியில் தற்காலிககூட்டணிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த நிலை சர்வதேச அமைதியின் அடிப்படைத் தத்துவங்களையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. சர்வதேச சட்டத்தின் மதிப்பு, மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கான கூட்டு தீர்வுகள் போன்ற அடிப்படைகொள்கைகள் பலவீனமடையும் அபாயம் உள்ளது.
எனினும் பல்தரப்பு முறையின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. வரலாறு காட்டுவது என்னவென்றால், உலகஅரசியலில் ஏற்பட்ட பெரிய நெருக்கடிகள் பல சமயங்களில் புதிய சீர்திருத்தங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களின்மறுசீரமைப்பிற்கும் வழிவகுத்துள்ளன.
இன்றைய சூழ்நிலை உலக ஆட்சிமுறையை மறுபரிசீலனை செய்யும் ஒரு முக்கிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு மற்றும் அதன் Veto அதிகாரம் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டசீர்திருத்தங்கள் இப்போது தவிர்க்க முடியாத தேவையாக மாறியுள்ளன.
அதே சமயம், சர்வதேச சட்டமும் பொறுப்புக்கூறுதலும் பாதுகாக்கப்பட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) மற்றும் மனிதாபிமான சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், உலக தெற்குப் பகுதிகளின் (Globla South) குரல் சர்வதேச ஆட்சி அமைப்புகளில் பிரதிபலிக்கப்படவேண்டும். உலக மோதல்களின் விளைவுகளை அதிகமாக அனுபவிப்பவர்கள் அவர்கள் தான். எனவே பல்தரப்புமுறையின் எதிர்காலம் நம்பகமானதாக இருக்க வேண்டுமெனில், இந்த குரல்கள் சர்வதேச தீர்மானங்களில் முக்கியஇடத்தைப் பெற வேண்டும்.
அதேபோல், குடியியல் சமூகம் (Civil Society), கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவற்றின்பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. ஆயுத மோதல்கள், காலநிலை மாற்றம், தொழில்நுட்ப போட்டி போன்றஉலகளாவிய சவால்களை அரசுகள் மட்டும் தீர்க்க முடியாது. பல துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புஅவசியமாகிறது.
எனவே இன்று உலகம் காணப்போகிறது பல்தரப்பு முறையின் முடிவை அல்ல; அதன் மறுசீரமைப்பை.
ஈரான் மோதல் தற்போதைய உலக ஒழுங்கின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியை ஒருநீதியான, சமநிலையான மற்றும் நிலையான உலக ஒழுங்கை உருவாக்கும் வாய்ப்பாக மாற்றுவது இன்றைய உலகதலைவர்களின் முக்கிய பொறுப்பாகும்.
பல்தரப்பு (Multilateralism) முறையின் எதிர்காலமும் உலக அமைதியின் நிலைத்தன்மையும் அதன்மீதேசார்ந்திருக்கின்றன.

