Last Updated:
இந்தியர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டது.
இதன் விளைவாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. போயிங் குளோபல் நிறுவனத்தின் தலைவர் பிரெண்டன் நெல்சன் இது குறித்துக் கூறுகையில், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சர்வதேச பயணத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை முதல் இதுவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய 20,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தார் மற்றும் பஹ்ரைனில் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.
விமானங்கள் பறக்க முடியாத சூழலிலும், நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாலும் விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு அதிகரித்து பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது அந்த வழித்தடம் முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் உலகின் பல்வேறு விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

