இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை, ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் கூறுகையில், ‘ஈரான் போர் நிறுத்தத்தில் எங்களுக்கும் உடன்பாடு தான். ஆனால், லெபனான் மீது மட்டும் தாக்குதல் தொடரும்’ என்று தெரிவித்திருந்தார்.
சொன்னபபடி, இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலையும் தொடர்ந்தது.
இதை விரும்பாத ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ட்ரம்ப் ஆதரிக்கிறார்.

இப்போது ஈரான் போரின் ஒட்டுமொத்த மையமாக லெபனான் வந்து நிற்கிறது.
அப்படி என்ன லெபனானில் இருக்கிறது என்று பார்த்தால், மேலே சொன்ன வாக்கியத்தைச் சற்று மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
ஆம்… இப்போது ஈரான் போரின் ஒட்டுமொத்த மையம் லெபனான் அல்ல… லெபனானில் உள்ள ‘ஹிஸ்புல்லா அமைப்பு’.
லெபனானுக்கு வேண்டுமானால், ஹிஸ்புல்லா அமைப்பு சக்திவாய்ந்த ராணுவப்படையாகவும், அரசியலில் மிக முக்கியப் புள்ளியாகவும் இருக்கலாம்.
ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு ஆகும்.
ஈரானில் போர் என்றாலும், பாலஸ்தீனத்தில் போர் என்றாலும், இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் முக்கியமான குழுக்களில் ஒன்று, ‘ஹிஸ்புல்லா’.
அதனால், ஹிஸ்புல்லாவை முழுவதும் அழித்தால் தான், தங்களுக்குப் பாதுகாப்பு என இஸ்ரேல் நினைக்கிறது.
ஹிஸ்புல்லாவின் ராணுவக் கட்டமைப்பையும், ராணுவ பலத்தையும் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று பார்க்கிறது இஸ்ரேல். அதனால், ஈரானுடனான போர் நிறுத்தி வைக்கப்பட்டாலும், லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறது?
அமெரிக்காவிற்குமே ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரவாத அமைப்பு தான்.
‘தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்’ என்று ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் கூறுகிறது. அப்போது இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கும் தானே.

ஈரான் ஏன் ஹிஸ்புல்லாவிற்காக துடிக்கிறது?
ஈரானின் புரட்சிகரப் படையில் இருந்து தோன்றியது ஹிஸ்புல்லா. ஹிஸ்புல்லாவிற்கு நிதி முதல் ஆயுதம் வரை அனைத்திலும் உதவி செய்வது ஈரான்.
அப்போது தன்னுடைய பிள்ளைக்கு ஒரு பிரச்னை என்றால் ஈரான் ஓடி வரும் தானே.
ஈரானின் ஒரு அமைப்பு ஹிஸ்புல்லா என்பதால் ஈரான் போருக்கு அதுவுமே பெரிய அச்சுறுத்தல். அதனால், அந்தக் குழுவை இஸ்ரேல் தாக்குவது ஏதோ ஒருவிதத்தில் ஈரான் போருக்கு உதவும் என்று அமெரிக்கா கருதுகிறது.
ஹிஸ்புல்லா மீது… இஸ்ரேலின் பகை, அமெரிக்காவின் ‘தீவிரவாத’ அடையாளம், ஈரானின் பாசம் எல்லாம் ‘ஒருவருக்கு’ தான் பெரும் பிரச்னை. அது லெபனான்.
லெபனான் என்கிற நாடு ஹிஸ்புல்லா என்ற ஒரு அமைப்பினால் பெரிதாகவும்… தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், கடந்த மாதம், இந்த அமைப்பை லெபனானிற்குள் தடை செய்தது அரசாங்கம்.
ஆனாலும், அந்தத் தடையை லெபனான் அரசாங்கத்தால் கடுமையாக அமல்படுத்த முடியவில்லை.
இதற்கு காரணம், லெபனானுடன் ஹிஸ்புல்லா அமைப்பு மிக ஆழமாக ஊன்றிப்போய்விட்டது. ஹிஸ்புல்லா நினைத்தால் லெபனான் அரசாங்கத்தையே மாற்ற முடியும்.
மிக முக்கியமாக, ஹிஸ்புல்லாவை அடக்கும் அளவிற்கு லெபனான் அரசிடம் ராணுவம் இல்லை.
இதன் விளைவு, இப்போது லெபனான் இஸ்ரேலின் கோபத்தைச் சந்தித்து வருகிறது.

