‘ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது’ எனக் கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் ஐந்து நாட்களைக் கடந்த நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. டெஹ்ரானில் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதிகளில் ஒருவரான அலி சட்மானி உயிரிழந்தார்.
ஏற்கனவே ராணுவத் தளபதியாக இருந்த கோலமலி ரஷித் (Gholamali Rashid) கொல்லப்பட்ட நிலையில், கடந்த 13ஆம் தேதி அலி சட்மானி புதிய தளபதியாக பொறுப்பேற்ற நிலையில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் முக்கிய தளங்கள் மீது குண்டு வீசி தாக்கும் வீடியோ காட்சியையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. மேலும், ஈரானில் உள்ள அரசு தொலைக்காட்சி மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அரக்சி (Seyyed Abbas ARAGHCHI), தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடத்தியது கோழைத்தனத்தின் உச்சம் என்று சாடியிருந்தார். இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் நிலையில், ஈரானில் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பதற்றமான சூழலில், தான் கனடாவில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாடு கூடுதல் கவனம் பெற்றது.
அதற்கு காரணம், இருநாடுகளின் மோதலுக்கு அவ்வப்போது பஞ்சாயத்து செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாநாட்டின் மூலம் ஏதாவது தீர்வுக்கு வழி வகுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறி நாடு திரும்பினார். இஸ்ரேல் – ஈரான் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக டிரம்ப் ஜி-7 மாநாட்டில் இருந்து வெளியேறியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் தெரிவித்தார்.
அதனை மறுத்துள்ள டிரம்ப், இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை நிறுத்துவதற்காக தான் அமெரிக்காவுக்கு திரும்பவில்லை என்றும், போர் நிறுத்தத்தைவிட மிகப் பெரிய நிகழ்வு ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விமானத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரானின் அணுசக்தி பிரச்னைக்கு ஒரு உண்மையான முடிவு தேவை என்று கூறினார். இந்த நிலையில், தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் வான்பகுதி தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் சையத் அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்று தங்களுக்கு தெரியும் என்றும் அவர் தங்களுக்கு ஒரு எளிதான இலக்கு எனவும் கூறியுள்ளார். எனினும், மக்கள் உயிரிழப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் கமேனியை கொல்லப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள டிரம்ப், அவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் இருப்பதாக ஜி-7 தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் குறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘ஜி7 தலைவர்களான தாங்கள், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
நிலையற்ற மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தலைவர்கள், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் தாங்கள் தொடர்ந்து தெளிவாக இருக்கிறோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சர்வதேச எரிசக்தி சந்தைகளுக்கான தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருப்போம் என்றும் கூட்டறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
June 18, 2025 7:34 AM IST
“ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்…” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

