Last Updated:
போர் காரணமாக சர்வதேச எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதால் சிலிண்டர்களுக்கு இந்தியாவிலும் தட்டுப்பாடு உருவானது.
ஈரான் உடனான போரை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று தனக்கு தெரியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் ஈரான் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். ஈரான் தயாரித்து வரும் அணு ஆயுதங்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்கிற அச்சத்தின்பேரில் அந்த நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.
ஈரான் நாடு அமெரிக்காவுக்கு போரிட துருப்புகளை நிறுத்துவதற்கு உதவும் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், இந்த போர் காரணமாக சர்வதேச எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதால் சிலிண்டர்களுக்கு இந்தியாவிலும் தட்டுப்பாடு உருவானது. தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பி வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து ஈரான் மீது 5 நாட்களுக்கு தற்காலிகமாக ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது-
நாங்கள் ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதில் உடன்பாடு காணக்கூடிய பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஈரானின் மரியாதைக்குரிய மூத்த தலைவர்களுடன் அமெரிக்கா பேசியுள்ளது. இரு தரப்புமே ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறோம்.
இரு தரப்பினரும் பெரும்பாலும் இன்று தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவரிடமிருந்து நான் எதையும் கேள்விப்படவில்லை; அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது.
ஈரான் உடனான இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் மகிழ்ச்சியடையும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது ஈரான் மற்றும் அந்தப் பிராந்தியம் முழுமைக்கும் ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். நாங்கள் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால், அவர்கள் 2 வாரங்களுக்குள் அணு ஆயுதத்தை உருவாக்கி இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியிருப்பார்கள். என்று தெரிவித்தார்.


