தெஹ்ரான்:
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகர்சாதே (79) நேற்று உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலில் கமேனி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 79 வயதான மன்சூரே கோஜஸ்தே, கடந்த இரண்டு நாட்களாகக் கோமா (Coma) நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்ததாக ஈரானின் அதிகாரப்பூர்வ ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
மன்சூரே கோஜஸ்தே 1964-ஆம் ஆண்டு அலி கமேனியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரானின் அரசியல் விவகாரங்களில் இவர் நேரடியாகத் தலையிடவில்லை என்றாலும், கமேனியின் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாகத் திகழ்ந்தார்.
ஈரானில் தற்போது நிலவும் பதற்றமான சூழலில், உச்ச தலைவர் மற்றும் அவரது மனைவி இருவரின் மறைவும் அந்நாட்டில் பெரும் அரசியல் வெற்றிடத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




