Last Updated:
ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடு போரில் இணைந்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதலில் மூன்றாவது நாடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக தலையிட்டுள்ள நிலையில், ஈரானிற்கு ஆதரவாக ஒரு நாடு இந்தப் போரினுள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அணுஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டின் மீது கடந்த 13-ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத்தான் இஸ்ரேல் குறிவைத்திருந்தது. தற்போது சண்டையில் இணைந்துள்ள அமெரிக்காவின் குறியும் அதுவாகத்தான் இருக்கிறது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தெற்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் ஃபோர்டோ பகுதியில் சாதாரண ஏவுகணைகள் ஊடுருவ முடியாத வகையில் மலையை குடைந்து அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு இதன் மீது, கண்காணிப்பில் சிக்காத பி-2 குண்டு வீச்சு விமானங்களை வைத்து, தரைப்பகுதியை துளைத்துச் சென்று தாக்கும் ’பங்கர் பஸ்டர்’ எனப்படும் GBU-57 Massive Ordnance Penetrator என்ற குண்டுகளை வீசியது அமெரிக்கா. ஆறு பி2 விமானங்கள் ஃபோர்டோ அணு உலை மீது தலா 2 ஆயிரத்து 721 கிலோ வெடி மருந்துடன் 13 ஆயிரத்து 607 கிலோ எடை கொண்ட 12 குண்டுகளை வீசின.
அதேநேரத்தில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஈரானின் நடான்ஸ், இஸ்பகான் அணு உலைகள் மீது அடுத்தடுத்து 30 அதிநவீன ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணைகள், ஆயிரத்து 550 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை என்று கூறப்படுகிறது. நடான்ஸ் அணுஉலை மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, பி2 பாம்பர் ரக விமானம் மூலமும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. ஈரானை தாக்கிய அத்தனை விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது துணை அதிபர் உள்பட 9 பேருடன் அதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்காணித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஃபோர்டோ அணு உலை தரைக்கு அடியில் 80 முதல் 90 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் பி2 ரக விமானத்தில் இருந்து வீசப்படும் குண்டுகள் அதிகபட்சமாக 60 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே நிலத்தை துளையிட்டுச் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், ஃபோர்டோ அணுஉலை முற்றிலும் சேதமடைந்ததா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஃபோர்டோ அணு உலையில் இருந்து இரண்டு முறை வெப்ப அலை எழுந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் குவாம் மாகாண செய்தித்தொடர்பாளர் மொர்டேஷா ஹைதாரி உறுதி செய்துள்ளார். ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா நேரடியாக களமிறங்கியதால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனும் போரில் குதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏமன் அதிகாரப்பூர்வமாக போரில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் கடல் பரப்பில் இருக்கும் கப்பல்கள் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
June 22, 2025 5:43 PM IST


