Last Updated:
ஈரான் தனது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க இந்த வழித்தடத்தைப் பலமுறை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான மோதலால் ஹார்முஸ் நீரினையை மூடுவதாக ஈரான் அறிவித்த நிலையில் இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவுடனான போர் எதிரொலியால் அரேபிய கடற்பரப்பையும் ஈரானையும் ஒன்றிணைக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியை தற்காலிகமாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதம் அதாவது நாளொன்றுக்கு 2 கோடி பேரல்கள் இந்த ஹர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் இந்தியா தனது 50 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்கிறது. ஈராக், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஹர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொறு இடையூறும் இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். ஹர்மூஸ் நீரிணை முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு டாலர் உயர்வுக்கும் இந்தியா தனது ஆண்டு இறக்குமதி பட்ஜெட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஹர்முஸ் நீர்ச்சந்தி ஒரு ‘நெருக்கடியான முனை’ என்று அழைக்கப்படுகிறது. ஈரான் தனது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க இந்த வழித்தடத்தைப் பலமுறை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
ஒருவேளை இங்கு போர் காரணமாகத் தடை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர்களைத் தாண்டக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


