“ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறது’ என்பது தான் இஸ்ரேல் – ஈரான் தாக்குதலின் முக்கிய பின்னணி.
ஆனால், இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்டு கடந்த மார்ச் மாதம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி 2003, அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் நிறுத்தத்திற்கு பிறகு, மீண்டும் அதை அங்கீகரிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
ஆனால், தற்போது இஸ்ரேல் ஈரான் மீது அணு ஆயுத தயாரிப்பு குற்றசாட்டை முன்வைக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவிப்பதுப்போலத் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சுகள் உள்ளன.
இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியில் திரும்பிய ட்ரம்பிடம் துளசி கப்பார்டின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அவர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. அவர்கள் ஒன்றை (அணு ஆயுத வெடிகுண்டு) கிட்டத்தட்ட தயாரித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
இது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பேச்சிற்கு வலு சேர்ப்பது போல் உள்ளது.

