ஈரானின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான நோபிடெக்ஸ் மீது ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை தடைகளை விதித்துள்ளது.
ஈரானுடனான அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ள சூழலில் இந்த அதிரடி நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையுத்தரவு நோபிடெக்ஸ் நிறுவனம், அதன் தலைமைச் செயல் அதிகாரி, மூன்று இணை நிறுவனர்கள் மற்றும் ஈரானின் மேலும் மூன்று கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனங்களை இலக்கு வைத்துப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ரியாலின் மதிப்பு
ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகள், தடைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் ஈரானிய புரட்சிகரக் காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கு நோபிடெக்ஸ் நிறுவனம் உடந்தையாக இருந்ததாக அமெரிக்க திறைசேரி குற்றம் சாட்டியுள்ளது.

Image Credit: InsideBitcoins.com
குறிப்பாக, வீழ்ச்சியடைந்து வரும் ஈரானிய ரியாலின் மதிப்பைத் தாங்கிப் பிடிப்பதற்காக, அந்நாட்டு மத்திய வங்கி நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்பிலான ஸ்டேபிள்காயின்களை அணுக இந்த நிறுவனம் உதவியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஆதரவு ஹேக்கர்கள்
மேலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானில் தொடங்கியதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட இணைய முடக்கங்களுக்கு மத்தியிலும் ஆட்சியாளர்களின் சொத்துக்களைப் பாதுகாப்பாக ஈரானுக்கு வெளியே மாற்றுவதற்கு இந்நிறுவனம் பங்காற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆதரவு ஹேக்கர்கள் இந்த நோபிடெக்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 90 மில்லியன் டொலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களைத் திருடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

