அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானில் உள்ள ரெட் கிரசெண்ட் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை இரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால், இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை (28) அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தினர் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அலி காமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை (28) முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானில் உள்ள ரெட் கிரசெண்ட் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள 131 நகரங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுமார் 150 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

