Last Updated:
கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் நியூயார்க்கில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரான் எந்தக் சூழ்நிலையிலும் அணுஆயுதத்தைப் பெற முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் எக்காலத்திலும் அணுஆயுதத்தை வைத்திருக்க முடியாது!” என்று ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹோர்மூஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி 7 நாட்கள் கெடு கொண்ட வரைபடத் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.
அதில், அமெரிக்கா தனது முடக்கப்பட்ட 12 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க வேண்டும், எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை ஈரான் விதித்திருந்தது.
இருப்பினும், ஈரானின் இந்த 7 நாள் அமைதித் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஈரான் தனது கோரிக்கைகளுக்கு முழுமையாகப் பணியும் என்பதில் டிரம்பிற்கு நம்பிக்கை இல்லை என்றும், அமெரிக்காவின் நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் நியூயார்க்கில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

