Last Updated:
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஈரான் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களம் இறங்கியுள்ளன. இன்னும் 1 வாரத்திற்குள்ளாக ஈரானின் வான் பரப்பு முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுச் சிதைத்து வருவதாகவும், இதன் மூலம் ஈரானுக்குள் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்கப் போர் விமானங்களால் ஊடுருவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த சில நாட்களாகத் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனியின் வருகைக்குப் பிறகு, ஈரான் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனை முறியடிக்கும் விதமாகவே, ஈரானின் வான்பரப்பைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஈரான் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வான்பரப்பைக் கட்டுப்படுத்துவது என்பது, ஒரு நாட்டின் பாதுகாப்புத் தற்காப்பை முழுமையாக முடக்குவதற்குச் சமமாகும்.
ஏற்கனவே ஈரானியப் போர்க்கப்பல் இலங்கை அருகே தாக்கப்பட்ட மர்மம் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த வெளிப்படையான மிரட்டல் போரை மேலும் தீவிரப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்க வான்வழி ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டால், ஈரானின் தரைப்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் மிக எளிதாகத் தாக்கப்படும் அபாயம் உள்ளது.
‘ஈரானின் வான் பரப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்’ – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

