ஈரானும் தனது அணு சக்தித் திட்டத்தினை யுரேனியச் செறிவூட்டல் என்ற நிலைக்குக் கொண்டு போக ஆரம்பித்தது. பொதுவாக யுரேனியச் செறிவூட்டல் , சிவில் அணு மின் சக்திக்கும் அவசியம். ஆனால் சிவில் திட்டங்களுக்கு யுரேனியம் 3.67% அளவுக்கு செறிவூட்டப்பட்டால் போதும்.
அதற்கு மேலும் கூட இரண்டு நிலைகள் உண்டு. யுரேனியத்தை 20% செறிவூட்டினால் அதை அணு ஆராய்ச்சி வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.
அதைத் தாண்டி 90% வரை செறிவூட்டினால்தான் , அணு குண்டு தயாரிக்க அதைப் பயன்படுத்த முடியும்.
ஈரானின் இந்த விஸ்தரிக்கப்பட்ட திட்டம் 1990களின் இறுதிவரையில் கூட ஆயுதத் தயாரிப்புக்க்கு தேவையான அளவை எட்டவில்லை.

ஆனால் அந்த நிலையில் ஈரானிய அரசின் (பாரீசிலிருந்து இயங்கிய) எதிர்க் கட்சிக் குழு ஒன்று கசியவிட்ட தகவலை அடுத்து ஈரானின் அணு சக்தித் திட்டம் கண்ட முன்னேற்றம் வெளியே வந்து அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அச்சம் கொள்ளச் செய்தது
இஸ்ரேலின் தொடர் வற்புறுத்தலால், அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் ஈரான் தனது அணு சக்தித் திட்டத்தைக் கைவிடவேண்டும், அது அணு ஆயுத வல்லமை பெறக்கூடாது என்ற கொள்கையை எடுத்தனர்.
இதற்கான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் அழுத்தங்களை அடுத்து 2015-ம் ஆண்டு ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் , அமெரிக்கா மற்றும் பிற 4 வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட வைத்தன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டது. தனது அணு உலைகள் அனைத்தையும் சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் ( IAEA) கண்காணிப்பாளர்களின் பரிசோதனைக்கு அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டது.
யுரேனியச் செறிவூட்டலை சிவில் அணு சக்தி உற்பத்திக்குத் தேவையான 3.67% அளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளவும் ஈரான் சம்மதித்தது.
இதற்கு மாற்றீடாக, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட அமெரிக்காவும் மற்ற நாடுகளும் ஒப்புக்கொண்டன.

