இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஈரான் ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியால் ஆதரவு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெரி மற்றும் ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் நயீம் காசிம் ஆகியோருக்கு மேற்படி ஆதரவு வார்த்தைகளை தனது செய்தியில் அராக்சி தெரிவித்துள்ளார்.
விடுதலை நாள்
2000-ஆம் ஆண்டில் லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறியதை நினைவுகூரும் “எதிர்ப்பு மற்றும் விடுதலை நாள்” ஆண்டுவிழாவை முன்னிட்டு, லெபனான் அரசாங்கம், மக்கள் மற்றும் எதிர்ப்பு இயக்கத்திற்கு தனது வாழ்த்தையும் அராக்சி கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நிராகரித்த ஹிஸ்புல்லாவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கடுமையாகக் கண்டித்ததோடு, லெபனான் மக்களை வீதிகளில் இறங்குமாறும் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இவரது அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே விவாதிக்கப்பட்டு வரும் சாத்தியமான ஒப்பந்தத்தில், மார்ச் 2 முதல் 3,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்து, இலட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ள லெபனான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும் இடம்பெறுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் போது, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் உள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை ட்ரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

