ஈப்போ :
ஈப்போ-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவையை இன்று பாத்தேக் ஏர் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் அதன் உள்நாட்டு தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
பாத்தேக் ஏர் விமான நிறுவனம் இந்தச் சேவையைத் தொடக்கியிருப்பதாக பேரா மாநில சுற்றுலா, தொழில்துறை, முதலீடு மற்றும் பெருவழி மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் லோ ஸீ யீ தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பதிவு செய்து, சிங்கப்பூர் மலேசியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு வருகைக்கு மிகப்பெரிய ஆதாரமாக இது விளங்குகிறது என்றார் அவர்.
“இந்த நேரடி மற்றும் தினசரி விமான சேவை மூலம், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு பேராக்கின் வளமான பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் தனித்துவமான கலாச்சார அனுபவங்களைக் கண்டறிய வழிவகுக்கும்.
இது, ஈப்போவிலிருந்து பாதேக் ஏர் மேற்கொள்ளும் இரண்டாவது விமானச் சேவையாகும்.
“ஈப்போ அதன் பழைய நகர வசீகரம், காலனித்துவ கட்டிடக்கலை, சுண்ணாம்பு மலைகள், கலாச்சார சின்னமான குகைகள் மற்றும் பிராந்திய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு சமையல் காட்சிக்காகக் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் கொண்டாடப்படுகிறது.
“அணுகலை மேம்படுத்துவதன் மூலமும் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலமும், இந்த புதிய சேவை சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையான மற்றும் அர்த்தமுள்ள பயண அனுபவங்களைத் தேடும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும்,” என்று, 73 பேரை உள்ளடக்கிய பயணிகளை ஈப்போ, சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு வழியனுப்பி வைக்கும் வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.




