கோலாலம்பூர்:
சுமார் 480 கிராம் ஆபத்தான போதைப்பொருளைக் கடத்தியதாக ஈப்போவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
44 வயதான தியோ வாய் லூன் (Teoh Wai Loon) மற்றும் அவரது மனைவியான 38 வயது லிம் சுக் பெய் (Lim Suk Pei) ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் வாசிக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தனர். எனினும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால் அவர்களிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில், ஈப்போ, மேடான் பெர்ச்சாம் பிஸ்தாரியிலுள்ள அறை ஒன்றில், இருவரும் இணைந்து 480.60 கிராம் எடையுள்ள ‘மெத்திலீண்டியோக்சி மெத்தாம்படமைன்’ (MDMA) வகை போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது 1952-ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B(1)(a) மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34-ன் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



