ஈப்போ:
ஸ்ரீ இஸ்கண்டாரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று 1.92 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் உட்பட 4 தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் பிடிபட்டனர்.
நண்பகல் 1.40 மணியளவில், இரண்டு மாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 20 முதல் 22 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகளான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறை பதில் தலைவர் DCP சுல்காஃப்லி சாரியாட் தெரிவித்தார்.
“சுமார் 2,500 ரிங்கிட் மதிப்புள்ள குறித்த போதைமருந்துகள், தங்கள் சொந்த உபயோகத்திற்காகவும் விநியோகத்திற்காகவும் அவர்கள் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Mercedes Benz C200 கார், ரிங்கிட் 400 ரொக்கம் மற்றும் நெக்லஸ் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக சுல்காஃப்லி கூறினார்.
அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39பி, பிரிவு 6 மற்றும் பிரிவு 15 (1) (ஏ) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.
ஒரு சந்தேகநபர் நவம்பர் 20 வரை ஆறு நாட்களும், மற்ற மூவரும் நவம்பர் 19 வரை ஐந்து நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


