Last Updated:
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்து 78 டாலராக அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மோதலின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 9 சதவீதம் வரை உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 78 டாலராக அதிகரித்துள்ளது.
இந்தக் கடும் விலை ஏற்றத்தின் காரணமாக, எண்ணெயை அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயரக்கூடும். பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
மேலும், பல்வேறு துறைகளிலும் செலவு அதிகரித்து லாபம் குறையும். விலை அதிகரிக்கும்போது, அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும். இதனால், பொதுமக்களின் வாங்கும் திறனும் குறையும்.
அதேபோல், இரு நாட்டின் மோதல் காரணமாக வான் எல்லைகள் மூடப்படும். இதனால், ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரும் விமானங்கள் வேறு வழித்தடங்களைப் பயன்படுத்த நேரிடும். அந்தச் சூழலில் விமானங்கள் பயணிக்கும் தூரம் அதிகரிக்கும். இதனால், விமானங்களின் எரிபொருள் செலவும் அதிகரிக்கக்கூடும்.
June 14, 2025 4:36 PM IST


