Last Updated:
இஸ்ரேல், ஈரானின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு நேரடி அச்சுறுத்தல் இருப்பதால், கடல்சார் காப்பீட்டுச் சந்தை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட நேரடிப் போர் காரணமாக, உலக நாடுகளின் கடல்சார் வர்த்தகம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, கடல் பகுதியில் போர் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு வழங்கப்பட்ட பழைய காப்பீட்டு பாலிசிகளை லண்டன் மற்றும் சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இந்தப் பாதையில் பயணம் செய்ய விரும்பும் கப்பல்கள், இப்போது ‘போர் அபாயக் கூடுதல் கட்டணம்’ செலுத்த வேண்டியுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள் இனி ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாக ஆய்வு செய்த பின்னரே காப்பீடு வழங்க முடிவு செய்துள்ளன. உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் சுமார் 20% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள காப்பீட்டு நெருக்கடியால் கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயரும் அபாயம் உள்ளது. இதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்குமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுவதை தெரிந்துகொள்ளலாம்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், “ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் காரணமாக, சமீப ஆண்டுகளில் இந்தியா ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளது. ஆனால், தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85-90 சதவீதத்தை சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் பாதியை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இறக்குமதி செய்கிறது. அதோடு இந்தியா இறக்குமதியை நம்பியிருப்பதால், கப்பல் போக்குவரத்து தடைகள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயரலாம்.” எனக் கூறியுள்ளனர்.
அதோடு, “கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவுகள், பெட்ரோல், டீசல் விலைகளும் உயரும். உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை $1 உயர்ந்தால், இந்தியாவின் வருடாந்திர எண்ணெய் இறக்குமதி செலவில் சுமார் $1 பில்லியன் கூடும், இது உள்நாட்டு எரிபொருள் விலையில் பிரதிபலிக்கும். சுருக்கமாக கூறினால், தற்போது இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிலையாக உள்ளன. ஆனால் நீடிக்கும் இஸ்ரேல்-ஈரான் மோதல், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, இறுதியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.” எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Mar 01, 2026 10:53 AM IST
இஸ்ரேல்-ஈரான் போர் அபாயம்… காப்பீட்டு நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு… பெட்ரோல் விலை அதிகரிக்குமா?


