Last Updated:
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு ஈரான் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஈரான் போரின் தற்போதைய நிலை என்ன…?
அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்துவரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் கைகோர்த்து நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என பொதுமக்களும் கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவானது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் 2ஆவது நாளாக பதில் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில், மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் கட்டடங்கள் உருகுலைந்தன. பெய்ட் ஷெமேஷ் நகரில் 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்த ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரானிய ஆளில்லா டிரோன் தாக்கியது. துபாய் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவில் பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் கப்பல் தளம் கரும் புகையுடன் காட்சி அளித்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு இந்தியர் உட்பட 58 பேர் காயம் அடைந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் 2 ஆவது நாளாக தாக்குதல் நீடித்தது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நிலையை தாக்கி அழித்ததில் 560 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஓமனின் கடற்பகுதியில் 15 இந்திய பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்ட எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே, ஈரான் அரசின் தலைமையகத்தை தாக்கி அழித்த காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு தயாராக இருந்த இரண்டு ஈரானிய ஜெட் விமானங்களை தாக்கி அழித்த காணொளியும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தாக்குதல் தொடர்ந்தது. ஈரானின் கெர்மன்ஷா நகரில் உள்ள ராஸி பல்கலைக்கழகம் அருகே இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதால் கரும்புகையுடன் காட்சி அளித்தது. ஈரானின் அரசு தொலைக்காட்சியான IRIB கட்டடம் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தின. ஆனாலும், ஒளிபரப்பு தொடர்ந்தது. போர் பதற்றம் காரணமாக ஈரான், குவைத், கத்தார், ஓமன் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த CBSE பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


