ஜோகூர் பாரு | ஏப்ரல் 3, 2026
ஜோகூர் பாரு, இஸ்கந்தர் சுல்தான் (Iskandar Sultan) நெடுஞ்சாலையின் 14-வது கிலோமீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த இரு பதின்ம வயது இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 4:25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தம்போய் (Tampoi) நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மூன்று நண்பர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையில் இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் 19 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த 16 வயது சிறுமியும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 18 வயது இளைஞர் வலது கையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காகச் சுல்தானா அமீனா மருத்துவமனையில் (HSA) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, ஜோகூர் பாரு (வடக்கு) மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ராடின் ரம்லான் ராடின் தஹா தெரிவித்துள்ளார்.
காரை ஓட்டிய இளைஞரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருந்ததா என்பது குறித்தும், காரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் போலீஸார் தற்போது புலனாய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் (அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் சுல்ஹிஷாம் அஜிஸ் (019-743 2966) என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




