Last Updated:
பிசிசிஐக்கு வரும் வருமானத்தில் ஐபிஎல் தொடர் மூலமாக மட்டும் 59% வருமானம் கிடைக்கிறது.
2023-24ஆம் ஆண்டில் மட்டும் பிசிசிஐக்கு ரூ.9741.7 கோடி வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் பிசிசிஐக்கு ஒரு தங்க முட்டையிடும் வாத்தாகதான் உள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, உலகின் திறமையான வீரர்களும் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், சாம்பியன் பட்டம் வாங்கும் அணிக்கே பரிசுகள் குவியும்.
இந்த நிலையில், 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் பிசிசிஐக்கு ரூ.9,741.7 கோடி வருமானம் வந்துள்ளதாகவும், அதிலும் ஐபிஎல் தொடரால் மட்டும் ரூ.5,761 கோடி வருமானம் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஐபிஎல் அல்லாமல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமைகள் மூலம் ரூ.361 கோடி பிசிசிஐக்கு வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ‘ரிடிப்ஃயூஷன்’ என்ற விளம்பர நிறுவனத்தின் தலைவர் சந்தீப் கோயல் தெரிவிக்கையில், பிசிசிஐ இன்னும் அதன் சக்தியை முழுமையாக உணரவில்லை. ஐபிஎல் மட்டுமின்றி உள்ளூர் தொடர்களான ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை போன்ற தொடர்களையும் பிசிசிஐ விளம்பரப்படுத்த முடியும்.
அதுமட்டுமின்றி பிசிசிஐக்கு சுமார் ரூ.30,000 கோடி வைப்பு நிதியாக மட்டும் உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1000 கோடி அளவிற்கு வட்டி மட்டுமே வருகிறது. இது மேலும் 10-12% வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வருமானத்தை ஈட்ட தவறுவதால், அவர்களும் தங்கள் நிதிக்காக பிசிசிஐ-யை தான் சார்ந்துள்ளது.
July 18, 2025 10:38 AM IST