Last Updated:
சாம்பியன்ஸ் டிராபியில் ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வேறொரு வீரருக்கு வழங்கியிருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார்.
நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவுக்கு ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ விருது கொடுக்கப்பட்ட நிலையில், அந்த விருதை வேறொரு வீரருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பட்டம் வென்ற நிலையில், தொடருக்கான சிறந்த வீரர் விருதான ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ விருது நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விருதை வேறொரு வீரருக்கு வழங்கியிருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார். அந்த வீரர் இந்திய அணியின் மேஜிக்கல் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
வருண் சக்கரவர்த்தி தான் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் ‘எக்ஸ்-ஃபேக்டர்’ ஆக செயல்பட்டார் என்றும் கருதும் அஸ்வின், அவரின் அபார பந்துவீச்சு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்ல முன்னேறியது என்று குறிப்பிடுகிறார். வருண் சக்கரவர்த்தி முழு தொடரிலும் விளையாடவில்லை என்றாலும், கேப்டன் ரோஹித் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் நல்ல ஆதரவை வழங்கினர் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், “என்ன சொன்னாலும், என் பார்வையில் ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ வருண் சக்கரவர்த்திதான். அவர் முழு தொடரிலும் விளையாடவில்லை. எனினும், வருண் இல்லையென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரே மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும். உண்மையான எக்ஸ் பேக்டர் அவர்தான். நான் நடுவராக இருந்திருந்தால், அந்த விருதை வருணுக்குக் கொடுத்திருப்பேன்.
க்ளென் பிலிப்ஸை வருண் எப்படி அவுட் செய்தார் என்று பாருங்கள். வருண் கிரீஸுக்கு அப்பால் சென்று அந்த கூக்லி வீசி பிலிப்ஸை காலி செய்தார். எனவே, என் பார்வையில், வருண் சக்கரவர்த்தி ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ வீரராக இருக்க வேண்டும். இந்த விருது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். வருண் சக்கரவர்த்திதான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்” என்று அஸ்வின் பேசியுள்ளார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதற்கு இந்தியாவின் பந்துவீச்சாளர்களே காரணம் என்றும் அஸ்வின் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 11, 2025 11:25 AM IST