செல்ம்ஸ்ஃபோர்டு: இந்திய யு19 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 64 பந்துகளில் சதம் கண்டார். இதை இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் அவர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் யு19 அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன.
2-வது டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 309 ரன்களும், இந்தியா 279 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா இந்தப் போட்டியின் கடைசி நாளில் விரட்டியது.
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விஹான் மல்ஹோத்ரா உடன் 100 ரன்கள் மற்றும் அபிக்யான் குந்து உடன் இணைந்து 117 ரன்கள் பாரட்னர்ஷிப் அமைத்தார் ஆயுஷ் மாத்ரே. அவர் 64 பந்துகளில் சதம் கடந்தார்.
80 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 13 ஃபோர்கள் மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இந்திய அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. கடைசி நாளின் ஆட்ட நேரம் முடிந்த காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம், 2-வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் விளாசி இருந்தார் 18 வயதான ஆயுஷ் மாத்ரே.