கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்துவந்த பெண் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு பக்கத்து வீட்டு இளைஞர் போட்ட கடத்தல் நாடகம் அம்பலமாகியுள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்துவந்தவர் கறார் காட்டியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம்மா. இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டெய்லராக வேலை செய்து கொண்டே, சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது ஆகிய தொழில்களையும் செய்து வந்துள்ளார்.
கணவனைப் பிரிந்த சந்திரம்மாவுக்கு 20 வயதான சுப்பிரமணியம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்க நகை வாங்க வேண்டும் என்று சந்திரம்மாவை, சுப்பிரமணியம் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், மாலையில் தனியாக வீட்டிற்கு திரும்பிய சுப்பிரமணியம், சந்திரம்மாவை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தங்களது மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில், சுப்பிரமணியத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சந்திரம்மாவை கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்திரம்மாவிடம், சுப்பிரமணியம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
பின்னர், தனக்கு தெரிந்த பெண் தானே என்ற நினைப்பில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அசால்டாக இருந்துள்ளார். ஆனால், வட்டித் தொழில் செய்வதால் உறவினர்களாக இருந்தாலும், நண்பராகவே இருந்தாலும் வரவு, செலவு விஷயத்தில் சந்திரம்மா மிகவும் கறாராக இருந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடு என்று சுப்பிரமணியத்திடம் அடிக்கடி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பெண்ணை கொலை செய்ய இளைஞர் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று நகை வாங்கி வரலாம் எனக் கூறி சந்திரம்மாவை, தனது இருசக்கர வாகனத்தில் சுப்பிரமணியம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து சந்திரம்மாவை தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை முட்புதரில் வீசிக் சென்றதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, சுப்பிரமணியம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

