Last Updated:
பிரியங்கா தற்கொலை செய்து கொள்ளவில்ல, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என்பது அம்பலமாகியுள்ளது. உடனே, அவரின் காதலன் யோகேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் இளம்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் லிவ்-இன்-பார்ட்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய காதலன் உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. 29 வயதான இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்துள்ளார். இதையடுத்து தனியாக இருந்த பெண்ணுக்கு யோகேஷ் பஹிர்வார் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. யோகேஷ் பிரியமாக நடந்து கொண்டதால் அவர் மீது பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. தன்னை விட 7 வயது குறைந்தவர் என்ற போதும் திருமணம் செய்யாமல் கணவன் – மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
இது தொடர்பாக தனது பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிய பிரியங்கா, அவர்களின் வீட்டு மேல் தளத்திலேயே காதலன் உடன் தங்கியுள்ளார். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த லிவிங்-டுகெதர் வாழ்க்கையில், நாளுக்கு நாள் சண்டை சச்சரவு அதிகரித்துள்ளது. கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிரியங்கா திடீரென மயக்கம் அடைந்ததாக அவரின் பெற்றோருக்கு போன் செய்து யோகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், பதறியடித்து ஓடி வந்த பெற்றோர் பிரியங்காவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக லிவ்-இன்-பார்ட்னர் கூறியதால், உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருபது நாட்களுக்குப் பின் தற்போது உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், பிரியங்கா தற்கொலை செய்து கொள்ளவில்ல, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என்பது அம்பலமாகியுள்ளது. உடனே, அவரின் காதலன் யோகேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சம்பவத்து அன்று லிவ்-இன்-பார்ட்னர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்திரமடைந்த யோகேஷ், வீட்டில் இருந்து செல்போன் சார்ஜர் வயர் மூலம் பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், யோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். லிவிங்-டுகெதரில் இருந்த பெண்ணை காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகம் ஆடியவர், 20 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்ட சம்பவ்ம் சந்திரப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


