Last Updated:
திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவி போன்று ஒன்றாக வசித்த இளம்பெண்ணை, லிவ்-இன் பார்ட்னரே கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது லிவ்-இன் பார்ட்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு அழுத்தம் கொடுத்ததால் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடியவர் சிக்கியது எப்படி?
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பா. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஐயப்பா உறுதியளித்துள்ளார். அதை நம்பி, அந்தப் பெண்ணும் அவருடன் பெங்களூரு கிளம்பி வந்துள்ளார்.
பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி, திருமணம் ஆகாமலேயே கணவன் – மனைவி போன்று வாழ்ந்து வந்துள்ளனர். இதில், ஐயப்பா பழக்கடை ஒன்றில் கண்காணிப்பாளராகவும், ரஞ்சிதா சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை செய்து வந்துள்ளனர். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணை அவ்வப்போது லிவ்-இன் பார்ட்னர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் தனது பெற்றோருக்கு போன் செய்து அழுது புலம்பியுள்ளார். இந்த நிலையில் ரஞ்சிதாவின் பெற்றோருக்கு ஐயப்பா போன் செய்துள்ளார். உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியதும், பெற்றோர் பதறியடித்துக்கொண்டு பெங்களூருக்கு வந்துள்ளனர். அங்கு வந்ததும், தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஐயப்பாவைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.
லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை உடனே திருமணம் செய்ய கூறி ஐயப்பாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதற்கு, தனது மனைவியைப் பிரிந்த நிலையில், முறைப்படி இன்னும் விவகாரத்து பெறவில்லை என ஐயப்பா தெரிவித்துள்ளார். எனவே, விவகாரத்து கிடைத்ததும் திருமணம் செய்வதாக கூறி இழுத்தடித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையின்போது ஆத்திரமடைந்த ஐயப்பா, கேபிள் வயர் மூலம் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போன்று, உடலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் ஐயப்பா குற்றத்தை ஒப்புக்கொண்டதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவி போன்று ஒன்றாக வசித்த இளம்பெண்ணை, லிவ்-இன் பார்ட்னரே கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


