கொழும்பு:
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மூன்று ஹோட்டல்களிலும் மூன்று தேவாலயங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அத்தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டனர். தொடரும் அதன் விசாரணையில் சம்பவத்துக்குப் பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் உளவுத் துறைத் தலைவரை மூன்று மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அதிபர் அனுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (PTA) பதவி ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியான சுரேஷ் சாலேயை 90 நாள்கள் அதிகாரிகள் விசாரிக்க அதிபர் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கைக் காவல்துறை சனிக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது.
குற்றவியல் விசாரணை அதிகாரிகள் திரு சுரேஷை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். ஏறத்தாழ 500 பேருக்கு மேல் காயமடைந்த அந்தத் தாக்குதல் தொடர்பாக நீண்டநாள்களாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் கைதாகியுள்ள மிக உயர் பதவி வகித்தவராக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே இடம்பெறுகிறார்.
ஒன்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய அத்தாக்குதலில் 45 வெளிநாட்டினர் பலியாகினர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களை நீதிமன்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாது.




