இந்த உலகளாவிய மாற்றங்கள் இலங்கையின் இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, தனது சமீபத்திய கூட்டத்தில் கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75 சதவீதம் என்ற நிலையிலேயே தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் உள்நாட்டு பொருளாதார முன்னேற்றங்கள், உலகளாவிய நிதி மற்றும் வர்த்தகச் சூழல், எதிர்கால பணவீக்கக் கணிப்புகள் மற்றும் பொருளாதார அபாயங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பின்னரே எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்ற நிலைமைகள் உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், உலக பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் அபாயம் காணப்படுவதாக மத்திய வங்கியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உலகளாவிய மாற்றங்கள் இலங்கையின் இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், 2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான பொதுப் பணவீக்கம் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு எரிசக்தி விலைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இந்தப் பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை, பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, நிதிச் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால பணவீக்கத்தின் போக்கை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சூழ்நிலைகளில் நாணயக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் கொள்கை வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான நிதிச் சூழலை உறுதிப்படுத்துவதே, இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
