இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் 30 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
ஹோவ் கௌண்டி மைதானத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர் பிரட்டி மக்கன் 139 பந்துகளில் 174 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் துனிர களுபஹன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாடி இலங்கை இளையோர் அணி கடைசி வரை போராடியபோதும் அந்த அணி 49.2 ஓவர்களில் 330 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா அதிகபட்சமாக 59 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (03) அதே ஹோவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

