Last Updated:
இலங்கை வெலிகம கவுன்சில் தலைவர் லசந்த விக்ரமசேகர அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டார்.
இலங்கையில் எதிர்க்கட்சியாக இருப்பது சமகி ஜன பலவேகய எனும் கட்சி. இந்தக் கட்சியின் நிர்வாகியும், இலங்கையின் கடல் நகரமான வெலிகமவின் கவுன்சில் தலைவராகவும் இருந்தவர் லசந்த விக்ரமசேகர (38).
இவர், வெலிகமவில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (22ஆம் தேதி) கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு மர்ம நபர், தன் கையில் இருந்த துப்பாக்கியைக் கொண்டு லசந்த விக்ரமசேகரவை நோக்கி சுட்டுள்ளார்.
அலுவலகத்தினுள் துப்பாக்கிச் சூடு நடந்ததும், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த மர்ம நபர் பல குண்டுகளை சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில், லசந்த விக்ரமசேகர மீது குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்தார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் லசந்த விக்ரமசேகரவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துவிட்டனர். இந்தக் கொலை தற்போது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர் பல குண்டுகளை சுட்டிருந்தாலும், அது அங்கிருந்த மற்ற யாரையும் காயப்படுத்தவில்லை. குறி நேராக லசந்த விக்ரமசேகரக்கே வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது மட்டுமே குண்டுகள் பாய்ந்துள்ளன. எனவே, இது திட்டமிட்ட கொலை எனத் தெரியவருவதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “தேசிய பாதுகாப்பு எங்கே?” எனக் காட்டமாகக் கேட்டுள்ளார்.
October 23, 2025 9:20 PM IST
இலங்கை அரசியல் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொலை! அலுவலகத்தினுள் நுழைந்த மர்ம நபர் வெறிச் செயல்


