இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில், முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார் திசநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இவர்களைத் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களத்தில் இருந்தனர்.
இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இலங்கையில் மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 20 மாவட்டங்களின் முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இடதுசாரிக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. தேசிய மக்கள் சக்திக் கட்சியின் அனுரகுமார் திசநாயகே இலங்கையின் அடுத்த அதிபராக வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனுரகுமார் திசநாயகே 45.4% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 17 மாவட்டங்களில் அனுரகுமார் திசநாயகே முன்னிலை வகித்துள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசா 30.1% வாக்குகள் பெற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இலங்கையில் தற்போது அதிபராக இருப்பவரும், மூத்த அரசியல் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே 14.9% வாக்குகள் எடுத்து மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் சார்பாகப் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேத்திரன் 3.3% வாக்குகள் எடுத்து நான்காம் இடத்தில் உள்ளார். அவர் 75,000 வாக்குகள் பெற்றுள்ளார்.
Also Read |
Sri Lanka Election | இலங்கையில் ஆட்சியமைக்கும் இடதுசாரி கூட்டணி… அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க?!
இந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம் சார்பில் அவரது மகன் நாமல் ராஜபக்சே போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் நான்காம் இடத்தில் இருந்தார். ஆனால் சுற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க நாமல் ராஜபக்சே பின்னடைவைச் சந்தித்து ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அவரைப் பின்னுக்குத் தள்ளி இலங்கைத் தமிழர்கள் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேத்திரன் 3.3% வாக்குகள் எடுத்து நான்காம் இடத்துக்கு முன்னேறினார். அரியநேத்திரன் யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறார்.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இலங்கைத் தேர்தல் முடிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
